மாவீரர் நாளுக்கு அரசின் இடையூறுகள் உணர்த்துவதென்ன..!
கார்த்திகை மாதம் ஆரம்பித்தவுடனேயே மாவீரர்களின் நினைவில் ஈழத் தமிழ் மண் கனக்கத் துவங்கியது. மாவீரர்கள் ஈழத் தமிழ் தாகத்துடன் தம்மை ஈர்ந்த விடுதலை விதைகள். அந்த விடுதலை விதைகளால் நிறைக்கப்பட்டது எம் நிலம்.
இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் இன உரிமைகளை வேண்டியும் எங்கள் களமாடி மாண்ட மாசற்ற மறவர்களின் நினைவில் ஈழத் தமிழ் இனம் இருக்கும் கார்த்திகை மாதத்தில், எம் தேசமெங்கும் கல்லறைகள் விழிதிறந்து தம் கனவுகளை தாகத்தோடு எடுத்துரைக்கும்.
தமிழ் ஈழ மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் பெரும் தாக்கம் செலுத்தும் கார்த்திகை மாதம், தமிழர் தேசத்தில் இருந்து பல்வேறு செய்திகளையும் சொல்லுமொரு காலமாகிறது.
மாவீரர் வாரம் ஆரம்பம்
ஈழத் தமிழ் தேசத்தில் நேற்றைய தினம், நவம்பர் 21இலிருந்து மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ளது.அத்துடன் கடந்த சில நாட்களாக மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகளும் ஈழத் தமிழ் தாயகம் எங்கும் இடம்பெற்று வருகின்றன.
அண்மையில் கிளிநொச்சி முரசுமோட்டையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வுக்கு செல்லுமொரு வாய்ப்பு கிடைத்தது. அங்கு வந்திருந்த ஒவ்வொரு தாய்மார்களதும், தந்தையர்களதும் முகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
வீரம் தெரியும் அந்த முகங்களில் ஈரமும் தெரிகிறது. தியாகம் தெரியும் அந்த முகங்களில் சோகமும் தெரிகிறது. ஈழ விடுதலைக்காய் தம் பிள்ளைகளை ஈர்ந்த அந்த முகங்களில் இருந்து எண்ணற்ற சேதிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு தந்தையும் தம் பிள்ளைகளைப் பெற்றெடுத்த போது கொண்டிருந்த கனவுகள் எப்படி இருந்திருக்கும்? ஆனாலும் அந்தப் பிள்ளைகள் எல்லாவற்றையும் துறந்து தேச விடுதலை என்ற புனித இலட்சியம் நோக்கிப் பயணம் செய்தார்கள்.
புலிச் சீருடை அணிந்து, கழுத்தில் நஞ்சு மாலை அணிந்து துப்பாக்கி ஏந்தி, ஈழத் தமிழ் தேசத்தின் விடுதலையே மூச்சென தலைவன் காட்டி பாதையே தீர்வென தம் பயணத்தை மேற்கொண்டார்கள்.
அத்தகைய பிள்ளைகளின் நினைவுகளில் மூட்டிய தேசமாக ஈழத் தமிழ் தேசம் இருக்கிறது. மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பில் நாம் மட்டுமல்ல, இலங்கை அரசும் சிங்கள மக்களும் மாவீரர் பெற்றோரின் முகங்களை வாசிக்க வேண்டும்.அதன் மூலம் பல செய்திகளை அவர்கள் பெற முடியும்.
விழிநீரால் விளக்கேற்ற தயாராகும் துயிலும் இல்லங்கள்
நவம்பர் 27 மாவீரர் நாள். அந் நாளை முன்னிட்டு தமிழர் தேசத்தின் மாவீரர் துயிலும் இல்லங்கள் தயாராகி வருகின்றன.
ஈழத் தமிழ் தேச மக்கள் திரண்டு எம் விடுதலைக்காய் களமாடி மாண்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தத் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக ஈழத் தமிழ் தேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இது இலங்கை அரசுக்கும் அதன் படைகளுக்கும் பெரும் மனவுளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவே செய்திகள் வாயிலாக உணர முடிகின்றது. மாவீரர் நாள் வருகிறது என்றவுடன் அரசுக்கும் படைகளுக்கும் இக் காய்ச்சல் வருடம் தோறும் ஏற்படுகிறது என்பதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டும்.
கிளிநொச்சி முழங்காவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு சென்றிருந்த தம்மை இலங்கை காவல்துறையினர் பல மணிநேரமாக துயிலும் இல்ல வாசலில் வைத்து விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளார்.
அதேபோன்று வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலுக்காக துயிலும் இல்லத்தை துப்புரவு செய்து, ஏற்பாடுகளை செய்த மாவீரர் நாள் பணிக்குழு மாங்குளம் காவல்துறையினரால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது.இவ்வாறு துயிலும் இல்லங்கள்மீது அரசின் அடக்குமுறைகள் இடம்பெற்று வருவதை இத் தகவல்கள் நன்கு தெளிவுபடுத்துகின்றன.
சாட்சியமான துயிலும் இல்லங்கள்
போர் குறித்த நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்காக கடந்த மாதத்தில் கிளிநொச்சியில் அதிபர் ரணில் அமைத்திருந்த ஒரு ஆணைக்குழுவில் கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வடக்கு கிழக்கு மக்களின் கருத்துக்களையும் அறிந்து கொழும்பில் ஒரு நினைவுத் தூபியை அமைக்கவுள்ளதாக ஆணைக்குழுவில் இடம்பெற்ற பேராசிரியர்கள், கலைஞர்கள் கூறியிருந்தார்கள்.
கிளிநொச்சியில் குறித்த ஆணைக்குழுவுக்கு கருத்துத் தெரிவித்த அனைவரும் அவ் யோசனையை அடியுடன் நிராகரித்திருந்தார்கள்.
மாவீரர் துயிலும் இல்லங்களில் சுதந்திரமாக அஞ்சலி செலுத்தும் ஒரு வாய்ப்பை முதலில் ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும் என்ற கருத்தை அங்கு பதிவு செய்திருந்தேன். போருக்கு எதிராகவும் இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் விடுதலை வேண்டி மாண்டவர்கள் மாவீரர்கள்.
அவர்களின் நினைவுச் சின்னங்களான துயிலும் இல்லங்கள் தான் இன விரிசலையும் ஒடுக்குமுறையையும் புரிந்து கொள்ள சரியான இடம். சிங்கள மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு வந்து செல்வதே ஈழத் தமிழ் மக்களை உணர்ந்துகொள்ளக் கூடிய இடம்.
எனவே போரின் நினைவுச் சின்னங்களாக மாவீரர் துயிலும் இல்லங்களையே நினைவுச் சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை ஆணைக்குழுவில் பதிவு செய்திருந்தேன்.
மாவீரர் துயிலும் இல்லங்களுடன் பகையை செய்துகொண்டு எந்த கருத்துடனும் எந்த முகத்துடனும் ஈழத் தமிழ் மக்களை நாடி வந்து எதுவும் நடக்காது. ஏனெனில் மாவீரர் துயிலும் இல்லங்கள்தான் ஈழ மக்களின் மனசாட்சி வெளிப்படும் மையங்களாகவும் குரல்களாகவும் உள்ளன.
ரணிலின் இரட்டை முகம்
கொழும்பில் போர் குறித்த நினைவுத் தூபியை அமைப்பதன் வாயிலாக அதிபர் ரணில் போரின் கொடூரத்தையே நினைவுபடுத்த முயல்கிறார். அந்த சந்தேகமே ஈழத் தமிழ் தேசத்திற்கு உள்ளது.
ஏனெனில் இலங்கை அரசும் படைகளும் ஈழத் தமிழ் நிலத்தில் அமைத்த போர் வெறி நினைவுச் சின்னங்கள் யாவும் ஈழத் தமிழ் மக்களை அச்சுறுத்தியபடியே உள்ளன.
அன்று கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் குழந்தைகளுக்கு அமைத்த பூங்காவில் இன்று இராணுவத்தினர் குழந்தைகளின் இதயங்களை குத்தும் பாரிய சன்னம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.
தமிழர்களின் இதயத்தில் குத்தும் சன்னத்தில் இருந்துதான் இலங்கையின் தேசிய மலர் பூக்கிறது என்று சொல்லுகின்ற இதுபோன்ற நினைவுத் தூபிகளைத்தான் இலங்கை அரசு கொழும்பிலும் அமைக்க முயற்படுகிறதா?
அதேபோல மாத்தளின் போர் வெற்றியுடன் நிமிர்ந்திருக்கும் இராணுவத்தினனின் சிலையும் ஈழத் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில்தான் அமைந்திருக்கிறது.
இப்படியான நினைவுச் சின்னங்களை வடக்கு கிழக்கில் அமைத்திருக்கும் அரசு, கொழும்பில் மாத்திரம் எப்படியான நினைவுச் சின்னத்தை அமைக்கும்?
மாவீரர் துயிலும் இல்லங்களின் நினைவேந்தலுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் அரசு கொழும்பில் எப்படியான நினைவுச் சின்னத்தை அமைக்கும்?
உலக நாடுகளை ஏமாற்றவும் இனப்படுகொலைக் குற்றங்களில் இருந்து தப்பவும் போர் சின்னம் அமைப்பதாக உலகிற்கு ஒரு முகத்தை காட்டுகின்ற அதிபர் ரணில், போரின் கொடுமைச் சின்னத்தை அமைப்பதுடன், மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல்களுக்கு தடைவிதித்து தன் உண்மை முகத்தை காட்டுகிறாரா?
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 23 November, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.