ஈழத்தமிழரின் உணர்வுகளை வைத்து அரசியல் செய்யும் ஆசாமிகள் வரிசையில் நெடுமாறனுமா... எழுந்தது சர்ச்சை!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் பாஜகதான் இருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இருக்க அண்மையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.
மேலும் சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்ச ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் வெளிவருவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது என தெரிவித்தர்.
அறிவிப்புக்கள் உண்மைதானா
ஆனால்,தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருபதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தற்போது மீண்டும் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து முன்னுக்கு பின் முரணான எதிர்வலைகளை தற்போது தோற்றுவித்துள்ளது.
தலைவர் உயிருடன் இருக்கிறார் என கூறிய நெடுமாறன் தற்போது ஆதாரம் கிடைத்தவுடன் வெளியிடுவதாக கூறிய விடயம் அவரின் முந்தைய அறிவிப்புக்கள் உண்மைதானா என்ற கேள்விகளை எழுப்புகிறது.
பின்னணியில் பாஜக
அதேபோல திருமாவளவன் கூறிய கருத்து போல் இதன் பின்னணியில் பாஜகதான் இருக்கிறதா என்ற எண்ணங்களை தமிழர்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.
தமிழ் மக்களை வைத்து அரசியல் செய்யும் ஆசாமிகளின் வரிசையில் நெடுமாறனும் இணைந்துள்ளாரா? தமிழ் தேசியத்திற்காக போராடி உயிர் தியாகம் செய்த ஒரு உன்னத தலைவரை வைத்து அரசியல் பின்னூட்டல் மூலம் எதை சம்பாதிக்க நினைக்கின்றார்கள்? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் அவர்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்த கால கட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்.
இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு
தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமா கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நேரத்தில், அரசியல் இலாபங்களுக்காக பழ. நெடுமாறன் செயற்படுகின்றாரா?
நெடுமாறனின் அறிவிப்பில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது முக்கியமான செய்தி அல்ல. நெடுமாறன் சொல்ல வந்த செய்தி இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு இந்தியாவுக்கு ஆபத்தாக அமைந்திருக்கலாம். அதற்காக இவ்வாறான கருத்தை அவர் வெளிப்படுத்தினாரா? என்பது மறுமுனை கேள்வியாக உள்ளது.
ஆனால் பாஜகவுக்கு இலங்கையில் தற்போது எதிர்ப்பு இருக்கிறது. இந்த எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும். அதற்கான பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பழ.நெடுமாறனின் அறிவிப்பு இருந்திருக்கலாமா என்ற கேள்வி ஒருப்பக்கம்.
இவ்வாறு பல்வேறு கேள்விகள் தமிழர்கள் மத்தியில்...
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்
மதுரையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன்,
"விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் இலங்கை தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அவர் உயிருடன் இருக்கிறார் என்ற ஆதாரத்தை நாங்கள் வெளியிட விரும்பினால், உங்களை அழைத்தே நாங்கள் கூறுவோம்.
எனக்கு அவர் தொடர்பான ஆதாரம் கிடைத்தால், நிச்சயம் பத்திரிகையாளர்களை சந்தித்து, அந்த ஆதாரங்களை வெளியிடுவேன்." என தெரிவித்துள்ளார்.
ஆனால், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என கடந்த மாதம் 13ஆம் திகதி பழ.நெடுமாறன் பத்திரிகையாளர்களிடம் உறுதியாக தெரிவித்ததன் பின்னணி என்ன? தொலைபேசி உரையாடல் என கூறியதன் காரணம் என்ன?
இவை அனைத்தும் ஈழத்தமிழர்களின் உணர்வுகளை வைத்து செய்யும் அரசியல் நாடகங்களாகவே தற்போது வெளிப்பட்டிருக்கின்றது.
