மக்கள் விடுதலை முன்னணியை கடுமையாக சாடும் அருட்தந்தை மா.சத்திவேல்
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) தாக்கப்பட்டதை விட மிக பயங்கரமான தாக்குதலை மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொண்டுள்ளதாக அருட்தந்தை மா.சத்திவேல் (M. Satthivel) தெரிவித்துள்ளார்.
அவரால் இன்றையதினம் (24.10.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் அண்மையில் 13ஆம் திருத்தம் அதன் மூலம் உருவான மாகாண சபை முறை தமிழ் மக்களுக்கு தேவையில்லை என கூறியமை புதிய விடயம் அல்ல.
விடுதலை முன்னணி
தமிழர்களுக்கு அரசியல் பிரச்சினை உள்ளமையை மக்கள் விடுதலை முன்னணியினர் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை.
அக் கட்சியினர் தேசிய மக்கள் சக்தியாக உருமறைத்துக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதோடு நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெறுவதற்காக மேடை அமைத்துக் கொண்டிருக்கையில் தமிழர்களின் அரசியல் விடயத்தில் தமது நிலைப்பாட்டில் எத்தகைய மாற்றமும் இல்லை என்பதை மீண்டும் தெளிவாக, வெளிப்படையாக, உறுதியாக தனது கட்சியின் செயலாளர் மூலம் ஜனாதிபதி அநுரகுமார மிகுந்த ராஜதந்திரத்தோடு தமது கட்சி செயலாளர் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக வருமாறு இந்திய பிரதமர் அழைப்பு கொடுத்திருக்கும் காலகட்டத்தில் இந்தியாவின் மூக்கை உடைத்து இருப்பது 1987ல் இந்திய (India) - இலங்கை (Sri Lanka) ஒப்பந்தத்தின் போது இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதை விட மிக பயங்கரமான தாக்குதலை மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் மேற்கொண்டுள்ளார் எனலாம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை
அது மட்டுமல்ல தற்போதைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) இலங்கை (Sri Lanka) தொடர்பாக எந்த ஒரு தீர்மானத்திற்கும் - யுத்த குற்றங்கள் தொடர்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றதோடு 51/1 தீர்மானத்தினை எதிர்ப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கே சவால் விட்டதன் மூலம் இதுவரை காலமும் இலங்கை தமிழர்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் கதைக்கும் பிரேரணை கொண்டு வரும் நாடுகளை தாக்கியுள்ளார்.
இவ்விடயத்தினை இந்தியாவும் ஐ.நாடுகள் மனித உரிமை பேரவையும் எவ்வாறு கையாளப்போகின்றன எனப் பொறுத்திருந்து பார்ப்போம். இது அவர்களின் பூகோள அரசியல் சார் விடயம்.
ஆனால் நடக்கப்போகும் தேர்தலில் வெற்றி பெறும் வடகிழக்கு தாயக வேட்பாளர்கள் எந்த அளவிற்கு கூட்டாக ராஜதந்திர ரீதியில் கையாள்வார்கள் என்பதில் பலத்த சந்தேகமே உள்ளது.
இவற்றோடு ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் தற்போது ஜனாதிபதி யுத்த குற்றங்கள் நிகழ்ந்த தமிழர் தாயகத்தில் நின்று "யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடக்கும். ஆனால் தண்டனை இல்லை. அதனை பாதிக்கப்பட்டவர்கள் கேட்கவும் இல்லை" எனக் கூறி காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை தேடும் குடும்ப உறுப்பினர்களை மட்டுமல்ல யுத்த குற்றங்களுக்கு நீதி கேட்டு நிற்கும் தமிழர்களை அவமானப்படுத்தியதையும் மறப்பதற்கு இல்லை.
தமிழர் தேசிய அரசியல்
அவரே யாழ் மண்ணில் "நான் 13 தருவேன், சமஸ்டி தருவேன் என்று கூறவரவில்லை. தெற்கு மக்களின் மனநிலையோடு உங்களை உருமாற்றிக் கொள்ளுங்கள் என அழைப்பு விடுத்து தமிழர் தேசிய அரசியலுக்கு தமது காலத்தில் இடமில்லை என்பதை அறிவித்து அதன் மூலம் தமிழர்கள் கன்னத்தில் அறைந்து சென்றார்.
மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த காலத்தில் தமிழர்களுக்கு எதிராக புரிந்த செயற்பாடுகள் ஒரு புறம் இருக்க தற்போது ஆட்சி அமைத்திருக்கின்ற சூழ்நிலையிலே அது தீவிரம் பெற்றுள்ளது.
இது வெறுமனே நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மையப்படுத்தி மட்டுமல்ல அதுவே இவர்களின் அரசியல் கொள்கை. இவர்களுக்கு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் ஆணை கிடைத்தால் அதுவே தமிழர் அரசியலுக்கு இறுதி முள்ளிவாய்க்காலாக அமைந்து விடும் அபாயமும் உள்ளது எனலாம்.
வடகிழக்கு தமிழ்த்தாயகத்தில் அதிகார கதிரைகளுக்காக மக்களை பிரித்து வாக்கு வேட்டையாடுவோர் பல்வேறு முகங்களில் தேர்தல் களத்தில் நிற்கின்றனர்.
இவர்களில் பலர் வாக்குகளை சிதைக்கவும் களத்தில் நிற்பதோடு நேரடியாக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவிப்போரும் மறைமுகமாகவும் தமது ஆதரவினை வழங்குவோரும் உள்ளனர்.
ஜனாதிபதிக்கு தனது ஆதரவு
சஜித் பிரேமதாசவும் (Sajith Premadasa) தற்போதைய ஜனாதிபதிக்கு தனது ஆதரவு உள்ளது என்று கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் தமிழின படுகொலையாளிகளே.
தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர் வெளிப்படையாகவே தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினை எடுத்தும் நாட்டில் ஊழல், அதிகார துஸ்பிரயோகம், அரச சொத்துக்களை சூறையாடல் போன்ற விடயங்களை கையில் எடுத்தே நாடாளுமன்ற தேர்தலுக்கு முகம் கொடுக்கிறனர்.
இவர்கள் அரசாங்கத்தில் உருவாகப் போகும் அரசியல் யாப்பு வடகிழக்கு மற்றும் மலையக தமிழர்களின் இன மற்றும் அரசியல் அடையாளங்களை அழிப்பதாகவே அமையும்.
தமிழர் தாயகம்
தமிழர் தாயகத்தில் தேர்தல் களத்தில் நிற்கும் பெரும்பாலான கட்சிகளும் அதன் வேட்பாளர்கள் இந்த அபாயத்தை உடனடியாக தெரியவில்லை மக்களுக்கு சவால்களையும் வெளிப்படுத்துவதாகவும் இல்லை இவள் நோக்கம் ஆட்சி கதிரைகளை கைப்பற்றுவது மட்டுமே.
வடகிழக்கு தமிழர் தாயக வாக்காளர்களே நாடாளுமன்ற தேர்தல் மாவீரர் மாதத்தில் நடைபெற உள்ளது என்பதை நினைவில் கொள்வோம்.
தேசிய தலைவரின் கொள்கைகள் அக்கொள்கை வழியில் நின்று உயிர் தியாகம் செய்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் என்பவரை மனக்கண் முன் நிறுத்தி தமிழர் தாயக அரசியலுக்கு எதிராக செயல்படும் சக்திகளை தோல்வி அடைய செய்யும் இலட்சியத்தோடு வாக்குகளை பயன்படுத்துவோம்.
இல்லையேல் மாவீரர்களுக்கு ஏற்றும் சுடர் தீயாகி எம் வாழ்நாளையே சுட்டெரித்து இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதை விட மிக பயங்கரமான தாக்குதலை மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொண்டுள்ளனர். என குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |