பிரித்தானியாவில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு!
உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (15-11-2026) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வின் போது பொதுச் சுடர்கள் ஏற்றப்பட்டு பிரித்தானியா மற்றும் தமிழீழ தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.
நினைவுப் பொருட்கள்
மாவீரர் பெற்றோர் உரித்துடையோர்கள், உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் பண்ணிசை முழங்க அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.
மண்டபத்தில் பொது மாவீரருக்கான திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்ததினை தொடர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வின் தொடர்ச்சியாக வரவேற்புரை, வரவேற்பு நடனம், மாவீரர் நினைவு நடனங்கள், மாவீரருடைய நினைவுப் பகிர்வுகள் மற்றும் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வின் வரலாறு என ஆழமான கருத்துக்களுடன் மேடை நிகழ்வுகள் நடைபெற்றது.
நிகழ்வின் சிறப்பு அம்சமாக மாவீரர் குடும்பங்களுக்கான நினைவுப் பொருட்கள் பகிரப்படாமல் அதற்காக செலவு செய்யப்பட வேண்டிய நிதியினையும் மேலதிக நிதிகளையும் சேர்த்து தாயகத்தில் வாழும் மாவீரர் குடும்பங்களின் நலன் காக்கும் நோக்குடன் மாவீரர் பணிமனையால் மக்கள் நலன் காப்பகத்திடம் ஒரு தொகை நிதி கையளிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான உறவுகள்
அதேபோன்று எதிர்வரும் தமிழீழ தேசிய கொடி நாளினை ஒட்டி ஏற்றப்பட இருக்கும் தேசிய கொடியினை நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவரும் தொட்டு ஆசீர்வதித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் கையளித்தனர்.
இக்கொடியானது எதிர்வரும் கொடி நாளில் லண்டன், ஸ்கோட்லேண்ட் மற்றும் லீவப்பூர் பகுதிகளில் ஏற்றப்பட்டு மீண்டும் மாவீரர் நாள் அன்று (27-11-2026) உலகத் தமிழர் வரலாற்று வளாகத்திற்கு எடுத்துவரப்பட்டு அன்றைய தேசிய நாளின் தொடக்க நிகழ்வாக ஏற்றப்பட இருக்கின்றது.

முழுமையான விருந்தோம்பலுடன் நடத்தப்பட்ட இந்த அடையாள நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான உறவுகள் கலந்து கொண்டனர்.
மேற்படி நாளின் அடையாள நிகழ்வாக விடுதலைப் புலிகள் பத்திரிகையின் ஆசிரியர் ரவியின் ஆக்கத்தில் உருவான படைப்புகளான தமிழர் படையின் சாதனைச் சமர்கள் மற்றும் வரலாற்றுத் தலைவனின் வழிகாட்டலில் எனும் நூல்களின் வெளியீடும் அறிமுக நிகழ்வும் நடந்தேறியது.
பொருளாதார ஆய்வாளர்
நூல்களின் அறிமுக உரையினை அரசியல் பொருளாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன் (பாலா மாஸ்ரர்), படைத்துறை ஆய்வாளர் பிரபாகரனும் (அருஸ் ) நிகழ்த்தியிருந்தனர்.
அரங்கம் நிறைந்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் தமிழ் தேசிய கருத்துகளுடன் இரு நூல்களும் வெளியீடு செய்யப்பட்டமை பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியா பிரிவு சார்பாக மாவீரர் நாளை முன்னிட்டு கடந்த சில நாட்களாக பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் குருதிக்கொடை நடைபெற்றது.
இந்தநிலையில் இவ்வாறு குருதி கொடை செய்தவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இதே மண்டபத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

