ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல்!
மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது
தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது.
அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மாவீரர்களுக்கு அஞ்சலி
தமிழ் தேசிய விடுதலைக்காக தனது மகனை கரும்புலியாக வழங்கிய தந்தை பொதுச் சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள்,அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதே நேரம் மாவீரர் துயிலும் இல்லங்களில் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.