முல்லைத்தீவு நீதவானின் பதவி விலகல் : வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வலியுறுத்து
முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் வெளிப்படையான உண்மையை கண்டறியும் விசாரணையை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பொலன்னறுவையில் இடம்பெற்ற மாநாடொன்றில் இன்று(30) உரையாற்றிய தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
பாரதூரமான நிலைமை
தனக்கு கொலை அச்சுறுத்தல் இருந்ததாகவும் அதனால் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் நீதவானால் கூறப்படும் கூற்றுக்கள் உண்மையாக இருந்தால், அது பாரதூரமான நிலைமையாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

"நீதவானால் முன்வைக்கப்பட்ட கூற்றுக்கள் உண்மையானால், ஒரு நாடாக நாம் எங்கே இருக்கிறோம் என எண்ணத்தோன்றுகிறது.
அரசாங்கத்திற்கு பாரபட்சம் காட்டாத தீர்ப்பை வழங்கியதற்காக ஒரு நீதிபதி கொலை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிட்டால், அது ஒரு தீவிரமான நிலைமையாகும்.
நீதவானின் கூற்றுக்களில் உண்மை இல்லையெனில், அதன் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.