இலங்கையில் நீதவானுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் - தீவிர விசாரணையில் காவல்துறை
நவீன இரண்டு மாடி வீடொன்றில் நீதவான் ஒருவரை அடைத்து வைத்து அவரது உத்தியோகபூர்வ கார் திருடப்பட்ட சம்பவம் பிலியந்தலை, மடபட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வாடகைக்கு வீட்டை பார்வையிட வந்த நபர் ஒருவர் நீதவானை வீட்டில் அடைத்து வைத்து அவரது காரை எடுத்துச் சென்றுள்ளார்.
நீதவான் ஒருவர் பிலியந்தலை மடபட பிரதேசத்தில் உள்ள தனது நவீன பாணியிலான இரண்டு மாடி சொகுசு வீட்டை வாடகைத் தளத்திற்கு வழங்குமாறு பிரபல இணையத்தளமொன்றில் விளம்பரம் ஒன்றை வெளியிட்ட நிலையில் அதன் பிரகாரம் நேற்றைய தினம் குறித்த வீட்டை பார்வையிட நபர் ஒருவர் வந்துள்ளார்.
அறைக்குள் பூட்டப்பட்ட நீதவான்

அதன்படி, பிலியந்தலை மடபட பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டை காண்பிப்பதற்காக நீதவான் தனது சொகுசு காரில் வந்துள்ளார். எனினும், நீதவான் வீட்டைக் காண்பிக்கும் போது, குறித்த நபர் நீதவானை மாடி அறையொன்றில் வைத்து பூட்டிவிட்டு நீதவானின் சொகுசு காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
கீழ் தளத்தில் காரின் சாவியை நீதவான் வைத்திருந்ததால், குறித்த நபர் காருடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் மாஜிஸ்திரேட்டின் காருடன் தப்பிச் செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. எனினும், நீதவான் தான் சிறை வைக்கப்பட்டிருந்த மேல்மாடி ஜன்னல் வழியாக குதித்து, இது தொடர்பில் காவல்துறைக்கு அறிவித்துள்ளார்.
விரைந்து வந்த காவல்துறை

சம்பவத்துடன் பிலியந்தலை காவல்துறையினர், கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் மேல்மாகாண குற்றப் பிரிவு அதிகாரிகள் வீட்டுக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சந்தேக நபர் வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கரவண்டியில் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.