கைதிகள் தொடர்பில் நீதிபதிகளுக்கு பறந்த உத்தரவு
எந்தவொரு சந்தேக நபரையோ அல்லது கைதியையோ சிறப்பு சிறையில் தடுத்து வைக்க நீதிபதிகள் உத்தரவிடக்கூடாது என்று நீதித்துறை செயலாளர் பிரசன்னா அல்விஸ் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மே 11, 2012 அன்று அப்போதைய நீதித்துறை சேவை ஆணையத்தின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன வெளியிட்ட சுற்றறிக்கையைப் புதுப்பித்து மீண்டும் வெளியிடுமாறு ஆணையம் தனக்குத் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய தற்போதைய செயலாளர் பிரசன்னா அல்விஸ் பழைய சுற்றறிக்கையைப் புதுப்பித்து 9 ஆம் திகதி புதிய சுற்றறிக்கையை வெளியிட்டார்.
சிறப்பு சிறையில் தடுத்து வைக்கக் கூடாது
அதன்படி, புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில், ஒரு சந்தேக நபரையோ அல்லது கைதியையோ சிறப்பு சிறையில் தடுத்து வைக்கக் கூடாது என்றும், ஒரு சந்தேக நபரையோ அல்லது கைதியையோ சிறப்புப் பாதுகாப்பிற்கு நீதிபதிகள் உத்தரவிடக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில நீதிபதிகளின் உத்தரவின் பேரில் சந்தேக நபர்கள் அல்லது கைதிகள் சிறப்பு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பெறப்பட்ட புகார்களைக் கருத்தில் கொண்டு இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு அழைத்துச் செல்ல நீதிபதிகள் உதரவிடக்கூடாது
சந்தேக நபர்கள் அல்லது கைதிகள் சிறையில் இருக்கும் காலத்தில், சிறப்பு சந்தர்ப்பங்கள் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் அவர்களின் வீடுகளுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ அழைத்துச் செல்ல நீதிபதிகள் உத்தரவிடக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அல்லது கைதிகள் ஏதேனும் காரணத்திற்காக சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டால், அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட சிறை கண்காணிப்பாளர் நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை கூறுகிறது.
சந்தேக நபர்கள் அல்லது கைதிகள் மருத்துவ சிகிச்சைக்காக செய்யும் கோரிக்கைகளை சிறை மருத்துவர்களிடம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
