கோட்டாபயவின் பாரிய வீடு அரசாங்க வசமானது.! கையகப்படுத்திய சிஐடி
கதிர்காமம் மெனிக் நதிக்கு அருகில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வைத்திருந்த வீடொன்று, நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (13) நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அந்தச் சொத்தை அரசாங்கச் சொத்தாக கையகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, மொனராகலை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் அப்துல் ஜப்பார் சம்பவ இடத்திற்குச் சென்று, சம்பந்தப்பட்ட கட்டிடத்தை பொறுப்பேற்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ராஜபக்சர்களின் வாக்குமூலம்
மெனிக் நதி வனப்பகுதியில் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட கோட்டாபயவின் இந்த வீடு தொடர்பாக சிறிது காலமாக விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தது.
இது தொடர்பாக, கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அசோக விக்ரமசிங்கவும் முன்னர் கைது செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, ருஹுணு கதிர்காமம் மகா தேவாலாவின் பஸ்நாயக்க நிலமே, திஷான் குணசேகர மற்றும் பலர் ஆகியோரிடமிருந்து காவல்ர்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
நோக்கம்
இதன்படி, கதிர்காமம் பிரதேச சபையால் வழங்கப்பட்ட ஒப்புதல்களின் சட்டபூர்வ தன்மை கேள்விக்குறியாக இருந்த நிலையில் குறித்த வீடு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த கட்டிடம் அரசு அதிகாரிகளின் தங்குமிடத்திற்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நீர்ப்பாசன பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த நடவடிக்கை மூலம் அரசுக்கு புதிய வருவாய் ஆதாரத்தை உருவாக்குவதே நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
