கடலில் வீசப்பட்ட இ.போ.ச பேருந்துகள்! பிரதமர் மஹிந்தவின் முன் அம்பலம்
கடந்த அரசாங்கத்தில் பாவனைக்கு உட்படுத்த முடியாத பேருந்துகள் கடலில் போடப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
“பேருந்தில் எதிர்காலத்திற்கு” எனும் திட்டத்தின் இரண்டாம் கட்டம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில்
நேற்றையதினம் (12) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பாவனைக்கு உட்படுத்த முடியாத பேருந்துகள் இரும்பிற்காக விற்பனை செய்த நிலையே காணப்பட்டது. அவ்வாறான பேருந்துகள் கடலிலும் போடப்பட்டன.
இ.போ.ச. ஊழியர்கள் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது போக்குவரத்துப் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை நூலகங்களாக மீள புதுப்பிக்கப்பட்டு நூலகங்கள் அற்ற பாடசாலைகளுக்கு வழங்கி வருகிறோம்.
இது எமது பிள்ளைகள் அறிவைப் பெற்றுக்கொள்ளவும், பிள்ளைகளை வாசிப்பிற்கு பழக்குவதற்கும் உந்துததலாக அமையும். இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து பாவனையில் இருந்து நீக்கப்படும் பேருந்துகள் முழுமையான நூலகங்களாக மாற்றப்படுகின்றன.
நூலக வசதியற்ற பாடசாலைகளுக்கு நாம் இப்பேருந்துகளை பெற்றுக் கொடுக்கிறோம். அதில் இலவச இணைய வசதியும் உள்ளடக்கம்.
இதுபோன்று 34 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.