மோசமடைந்துள்ள மகிந்தவின் உடல்நிலை: மிகுந்த கவலையில் சீலரத்ன தேரர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை முன்னரை விட மோசமடைந்துள்ளதாக பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று (13.10.2026) தனியார் வைத்தியசாலைக்குச் சென்று மஹிந்த ராஜபக்சவைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்த சீலரத்ன தேரர், அவர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
விரைவில் குணமடைய பிராத்திப்போம்
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் நிலவிய போரை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

இன்று அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு 83 வயதாகின்றது, அவரது உடல்நிலையும் மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரை நேரில் சென்று பார்வையிட்டபோது, அவர் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது.
அவர் விரைவில் குணமடைய நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |