பரபரப்பாகும் கொழும்பு அரசியல் - மஹிந்த -ரணில் திடீர் சந்திப்பு
தென்னிலங்கை அரசியல் களம் சூடுபிடித்து அரசாங்கத்திற்கு எதிரான அலைகள் எழும்பியுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.
நீண்டநேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருவரும் மனம்விட்டு பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரது இல்லத்தில் நேற்று இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில், அந்த சந்திப்பில் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டிருந்தார்.
இந்த சந்திப்பின்போது, சமகால அரசியல் விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் வரவு செலவுத்திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இணைப்பதற்கான இரகசிய முயற்சியொன்றில் கொழும்பு அபயராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஈடுபட்டு வருகின்றார்.
அண்மையில் நாடாளுமன்றத்திற்குச் சென்று பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து ஆசிபெற்றபோது அதனை அவர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் மஹிந்த - ரணில் சந்திப்பொன்று இடம்பெற்றிருப்பது கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.