மாதவனை பண்ணையாளர்கள் சூழற்சி முறையில் போராட்டம்
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி நேற்றைய தினம் ஐந்தாவது நாளாகவும் சூழற்சி முறையிலான போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
நேற்றைய போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் சமாசம், மண்முனை தென் மேற்கு கால்நடை கூட்டுறவு சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் கலந்துகொண்டனர்.
மேலும், முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தலைமையிலான மட்டக்களப்பு மண்முனை வடக்கு தமிழரசுக்கட்சி கிளையும் இன்றைய ஐந்தாம் நாள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் போராட்டத்தில் கலந்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது.
பதாதைகள்
கால்நடை பண்ணையாளர்கள முன்னெடுத்துவரும்; இந்த போராட்டம் வலுவடைந்துவரும் நிலையில் இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கறுப்பு துணியை அணிந்துகொண்டு கைகளைக்கோர்த்தவாறு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
[YLZHBN
]
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசே மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்கு, காணிக்கொள்ளையர்களே மேய்ச்சல்தரையினை விற்றுவிட்டீர்களா?, போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினார்கள்.
அரசாங்கத்தில், அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் தமது போராட்டத்திற்கு இதுவரையில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலையே காணப்படுவதாகவும் இங்கு பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
கிழக்கினை மீட்கப் போகின்றோம் என்று மட்டக்களப்பு மக்களிடம் வாக்குகளைப்பெற்றவர்கள் இன்று ஒரு மேய்ச்சல் தரையினைக்கூட மீட்கமுடியாத நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் மேலும் தெரிவித்துள்ளார்.