“நான் அமைச்சர்களுடன் மது அருந்தினேனா?” சபையில் மைத்திரி பதிலடி
தாம் தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
இன்று (11) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மைத்திரி, தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரசாங்க அமைச்சர்களுடன் மதுபானம் அருந்தியதாக விவசாய அமைச்சர் குற்றம் சுமத்தியதாக மைத்திரி தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க் கிழமை இந்தச் சபையில் எனது பெயரைக் குறிப்பிட்டு மஹிந்தானந்த அளுத்கமகே கூறிய இரண்டு விடயங்களை திருத்துவதற்கு நான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதாக குறிப்பிட்டார்.
நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எனது அரசாங்கத்தின் அமைச்சர்களுடன் மது குடித்திருந்தேன் என மஹிந்தானந்த ஒரு கட்டத்தில் கூறினார்.
நான் அதை முற்றிலும் நிராகரிக்கிறேன். இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் என்னை பற்றி தெரியும். அன்றும் அப்படித்தான் இன்றும், நாளையும் அப்படித்தான். எனவே, அந்த கருத்துக்கள் முற்றிலும் தவறானவை.
இரண்டாவது விடயம் என்னவென்றால், நான் அரச தலைவர் பதவியை இராஜினாமா செய்த பின் மூன்று வீடுகளை ஒன்றாக இணைத்து நான் அந்த வீட்டில் வசிப்பதாகக் கூறினார்.
நான் இருக்கும் உத்தியோகபூர்வ இல்லம் தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடமிருந்து பெறப்பட்டது.
நான் அங்கு செல்வதற்கு முன்னர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் அமைச்சராக இருந்தார் என்றும் குறிப்பிட்டார்.