ராஜபக்சர்கள் ஆட்சியில் மைத்திரியே இலக்கு - கவலை வெளியிட்ட தயாசிறி
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை (Maithripala Sirisena) இலக்கு வைத்து அவருக்கு எதிராக அரசியல் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது என சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர (Dayasri Jayasekara) தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) பிரதமராக நியமித்ததன் பின்னரே இவ்வாறான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அவர் மேலும் சாடியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போது சேவையாற்றிய புலனாய்வு பிரிவினரை இலக்கு வைக்கின்றனர்.
புலனாய்வு பிரிவினரால் தகவல்களை மாத்திரமே வழங்க முடியும். மாறாக ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்த முடியாது. குண்டு வெடிப்பதற்கு முன்னரும் கூட நிலாந்த ஜயவர்தன (Nilantha Jayawardena) சிறிலங்கா காவல்துறையினருக்கு தகவல்களை வழங்கினார்.
ஆனால் அவருக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்று தீவிரவாதிகளை தாக்க முடியாது. சஹ்ரானுடைய தொலைபேசி பாகத்தை (Mother Board) யார் எடுத்தது என்பது தொடர்பில் எவரேனும் கருத்து தெரிவித்தார்களா?
இந்த தொலைபேசி பாகத்தை எடுப்பதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் , அதனை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதனையே முதலில் ஆராய வேண்டும். அது தொடர்பில் ஆராய்ந்தால் மாத்திரமே பிரதான சூத்திரதாரிகளை இனங்காண முடியும்.
அதனை விடுத்து முன்னாள் சிறிலங்கா அரச தலைவரும், அமைச்சர்களையும் குறைகூறிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.