ஆளும் கட்சியின் செயலால் மைத்திரி கடும் சீற்றம்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக நினைக்கும் தற்போதைய அரசு அதில் சுதந்திரக்கட்சி எம். பிக்கள் 14 பேர் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena).
நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக அரசாங்க தரப்பு பொய் குற்றச்சாட்டுக்களையும் சேறு பூசும் வகையிலான கருத்துகளையும் முன்வைப்பதாக குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “கடந்த செவ்வாய்க் கிழமையன்று நாடாளுமன்றத்தில் முன்னாள் அரச தலைவர் 200 வாகனங்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று, அரச தலைவரது செயலகத்தின் வருடாந்த செலவு 3.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இது முற்றிலும் பொய்யான கருத்தாகும்.
எனக்கு நான்கு வாகனங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தன. அரசாங்கத் தரப்பின் இதுபோன்ற கருத்துகள் தவறானதும் சேறுபூசும் வகையிலான செயற்பாடுகளாகும். முன்னர் நடந்த விடயங்களை என்னாலும் வெளியிட முடியும்.
எனது ஆட்சிகாலத்தில் செலவு செய்யப்பட்டதாக தெரிவித்து 3.5 பில்லியன் ரூபாவையும், தற்போதைய அரச தலைவர் 2020ஆம் ஆண்டில் செலவு செய்த 1.5 பில்லியன் ரூபாவை ஒப்பிட்டு நான் பெருந்தொகை பணத்தை செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
எனது காலத்தில் அரவ தலைவரது செயலகத்தினூடாக 7 பிரதான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த வேலைத்திட்டங்கள் இன்று எந்தவொரு இடத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரியவில்லை. முன்னர் இருந்த அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்த வில்லை.
ஆகவே, அரசாங்க தரப்பிலிருந்து இவ்வாறு தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தவறான கருத்தாகும்” எனக் கூறியுள்ளார்.