போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்த மூவர் அதிரடியாக கைது
பொலன்னறுவை மனம்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில், போலி சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஏனைய வாகன அனுமதிப்பத்திரங்களை தயாரித்து பணம் பெற்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொலன்னறுவை (Polonnaruwa) குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 48 வயதுடைய மனம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரங்கள் மீட்பு
இந்த நிலையில், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரிடம் இருந்து 19 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுப் புத்தகங்களை தயாரித்தமை தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.

அந்த தகவலின் அடிப்படையில், வேரஹெரவிலுள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் உள்ள வாகன சாரதிகளுக்கான பயிற்சி நிலையமொன்றின் நடத்துநர் மற்றும் நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகில் போலி அனுமதிப்பத்திரம் தயாரித்தவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 39, 60 வயதுடைய பொரலஸ்கமுவ மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 03 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், 06 கையடக்கத் தொலைபேசிகள், கணனி மற்றும் சில ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மனம்பிட்டிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் மனம்பிட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        