வீழ்ச்சியடையும் பொருளாதாரம்: மீண்டும் இந்தியாவுடன் கைகோர்க்கும் முயற்சியில் மாலைதீவு!
இந்திய சுற்றுலாப் பயணிகளை மீண்டும் மாலைதீவுக்கு ஈர்க்கும் வகையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் சாலைக் காட்சிகளை நடத்தப்போவதாக ஒரு முக்கிய சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது.
மாலைதீவுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால்,மாலைதீவுகள் பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா நடத்துநர்கள் சங்கம் (MATATO) இந்திய உயர் ஆணையர் முனு மஹாவருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.
மாலைதீவு முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டதோடு சீனா ஆதரவாளராகவும் இருந்து வந்தார் இவர் தனது தேர்தல் பிரசாரத்திலேயே தான் வென்றால் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்களை வெளியேற்றுவேன் என்று கூறி பிரசாரம் செய்து வாகை சூடினார்.
இந்தியா- மாலைதீவு
அதேபோல் வெற்றி பெற்ற அவர் அங்குள்ள இந்திய இராணுவ வீரர்களை வெளியேறும்படி கூறினார். இது விவாதத்தை கிளப்பியது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடி சமீபத்தில் லட்சதீவுக்கு சென்று புகைப்படம் வெளியிட்டார்.
மாலைதீவின் சுற்றுலா துறையை முடக்கும் வகையில் உள்நோக்கத்துடன் லட்சத்தீவை பிரதமர் மோடி ஆதரிப்பதாக அந்நாட்டு அமைச்சர்கள் கூறியதோடு இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளையும் தெரிவித்தனர்.
இது இந்தியா-மாலைதீவு இடையேயான பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்தியது. இதனால் கடும் கோபமடைந்த இந்தியர்கள் மாலைதீவு செல்வதற்கான டிக்கெட்டுகளை இரத்து செய்தனர்.
சுற்றுலாதுறை பாதிப்பு
பல பிரபலங்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் தங்கள் முன்பதிவுகளை இரத்து செய்துவிட்டு மாலைதீவுக்குச் செல்லும் திட்டத்தை கைவிட்டனர். இதன்பின், மாலைதீவுக்கு வருகை தந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா, ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
மாலைதீவுகளின் சுற்றுலா அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி நிலவரப்படி, மொத்தமாக வந்த 6,63,269 சுற்றுலாப் பயணிகளில், சீனா தொடர்ந்து 71,995 சுற்றுலாப் பயணிகளுடன் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து இங்கிலாந்து (66,999), ரஷ்யா (66,803), இத்தாலி (61,379), ஜெர்மனி (52,256) மற்றும் இந்தியா (37,417) ஆகிய நாடுகள் உள்ளன.
இதனால், தீவு சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இந்நிலையிலேயே இந்த கூட்டம் கூட்டப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு ரோடு ஷோ
மாலைதீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடல்களுக்குப் பிறகு, MATATO ஒரு அறிக்கையில், சுற்றுலா முயற்சிகளை மேம்படுத்துவதற்காக மாலைதீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்ததாக இணையதளமொன்று தெரிவித்துள்ளது.
இந்திய நகரங்களில் ரோட் ஷோ நடத்தி, அதன் மூலம் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களை (Social Media Influencers) பயன்படுத்தி மாலைதீவுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முயற்சியை மாலைதீவு தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |