பெண்களின் புகைப்படங்களை வைத்து போலி முகநூல் பக்கங்கள்: ஒருவர் கைது
பெண்களின் படங்களைப் பயன்படுத்தி போலி முகப்புத்தக பக்கங்களை உருவாக்கி பணம் சம்பாதித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
பெண்களின் படங்கள்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருமணமான பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
முறைப்பாடு அளித்த பெண், தனது அனுமதியின்றி தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி முகப்புத்தக பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் பல பெண்களின் படங்களைப் பயன்படுத்தி முகப்புத்தக பக்கங்களை உருவாக்கி அவற்றின் அணுகல் (Reach) மற்றும் பார்வைகளை (Views) அதிகரித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 10,000 முதல் 20,000 வரையிலான பின்தொடர்பவர்களைக் கொண்ட அந்தப் பக்கங்களை, ஒவ்வொன்றையும் ரூபாய் 1,000 முதல் ரூபாய் 2,000 வரையிலான தொகைக்குச் சந்தேகநபர் விற்பனை செய்துள்ளார்.
மின்னஞ்சல் முகவரி
பக்கங்களை வாங்கியவர்களின் மின்னஞ்சல் முகவரிகளைச் சேர்த்து, அந்தப் பக்கங்களின் உரிமையைச் சந்தேகநபர் மாற்றி வழங்கியுள்ளார்.
சந்தேகநபர் பத்துக்கும் மேற்பட்ட முகப்புத்தக பக்கங்கள் மூலம் இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட நீதவான், சந்தேகநபருக்கு பிணை (Bail) வழங்கியுள்ளார்.
இருப்பினும் கணினி குற்றப் பிரிவின் அதிகாரிகள், நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும் சந்தேகநபரின் செயற்பாடுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் எனவும் மற்றும் அவர் தொடர்ந்தும் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டால் அது குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |