மருந்து விசிறப்பட்ட 424 கிலோ வாழைக்குலைகளை விற்பனை செய்ய முயன்றவருக்கு சிறை
ஆலய அன்னதானத்திற்காக வழங்குவதற்கு மருந்து விசிறப்பட்ட வாழைக்குலைகளை விற்பனை செய்ய முயன்ற நபருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வடமராட்சிப் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தின் திருவிழாவையொட்டி இடம்பெற்ற அன்னதானத்தில் வழங்குவதற்காக, நீர்வேலி பகுதியில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 424 கிலோ வாழைக்குலைகள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். உதயபாலா தலைமையிலான குழுவினரால் கைப்பற்றப்பட்டன.
மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில், சுமார் ஒரு வருடம் காலாவதியான பழங்களைப் பழுக்கச் செய்யும் மருந்து வாழைப்பழங்களுக்கு விசிறப்பட்டிருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
சுகாதார வைத்திய அதிகாரி
கைப்பற்றப்பட்ட வாழைக்குலைகள் கோப்பாய் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் கையகப்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் புதைக்கப்பட்டன.

இது தொடர்பில் நீர்வேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த நபருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி என். உசைன் முன்னிலையில் இன்று (25) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

