கல்லுண்டாயில் அனுமதியின்றி அராஜகம்! வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பிரதேச சபைக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் யாழ். மாநகர சபையின் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் குறித்த வீதியால் பயணிக்கும் மக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
அந்தவகையில் கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்படுகின்ற கழிவுகளை யாழ் மாநகர சபையினால் முகாமைத்துவம் செய்ய முடியாத காரணத்தினாலே அதற்கு தீ வைப்பதாக மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் பகீரதன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த ஆண்டில் மாத்திரம் 6 தடவைகள் தீப்பற்றியுள்ள நிலையில் 8 முதல் 10 நாட்கள் வரை அதிலிருந்து புகை வெளியேறிக்கொண்டிருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நோய்வாய்ப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் ஏன் இந்த விடயம் தொடர்பில் கண்டுகொள்ளவில்லை என்று எனக்கு தெரியாது.
எனது ஊகத்தின் படி மானிப்பாய் பிரதேச சபையும், யாழ் மாநகர சபையும் தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருப்பதால் நாங்கள் இறுக்கமான நிலையை கொண்டு வந்தால் தங்களுடைய கட்சியினுடைய பேருக்கு பங்கம் வரும் அல்லது அந்தக் கட்சியினர் நிலைமையை எவ்வாறு சமாளிக்கப் போகின்றார்கள் என்ற விடயம் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்“ என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |