செட்டியார் தெரு நகைக்கடை உரிமையாளர் தாக்குதல்: இரு காவல்துறையினர் மீது விசாரணை ஆரம்பம்
கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவில் நகைக்கடை உரிமையாளரை இரு காவல்துறையினர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கொழும்பு மத்திய பிரிவு காவல்துறை அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (24) பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம், தங்க நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அடையாளம் காணும் நடவடிக்கையின் போது ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினரால் அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், ஜீவா என்ற நபரை சுட்டிக்காட்டி அவர் தங்க நகையை திருடியதாக கூறியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரைத் தாக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
பாதிக்கப்பட்ட ஜீவா, தாம் கடையில் பணப் பரிவர்த்தனை தொடர்பாகச் சென்றிருந்ததாகவும், கடை உரிமையாளருக்கு சிங்கள மொழியில் உதவிய பின்னர் மீண்டும் அழைக்கப்பட்டபோது எந்த விசாரணையும் இன்றி காவல்துறையினர் தன்னைத் திருடன் எனக் கூறி தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதலின் போது தனது சட்டை கிழிக்கப்பட்டதுடன், காது மற்றும் கைப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான நகை வர்த்தகர்கள் காவல் அதிகாரிகளை சூழ்ந்ததுடன், பல நகைக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இதையடுத்து, மேலதிக காவல்துறை குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும், மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |