வீடு தேடி வந்த அதிஷ்டத்தை போலி என நினைத்தவருக்கு இறுதியில் அடித்த அதிஷ்டம்
அமெரிக்காவில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் வெற்றிபெற்ற நபர், அதனை போலி என நினைத்துள்ளார். ஆனால் அதிஷ்ட இலாப நிறுவனமே தகவலை தெரிவித்தவுடன் தான் அவருக்கு உண்மையான விடயமே புரிந்துள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த 59 வயது நபர் ஒருவர், அண்மையில் அதிஷ்ட இலாப டிக்கெட்டை வாங்கியுள்ளார். அதனை ஸ்கான் செய்தபோது அவருக்கு பரிசு கிடைக்கவில்லை. இதனால் அவர் தனது அன்றாட வாழ்க்கையில் மூழ்கிப்போனார் .
வந்தது மின்னஞ்சல்
இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் அவருக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் பரிசு கிடைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் குழம்பிப்போன அவர் தன்னுடைய நண்பர்கள் சிலர் விளையாட்டுக்காக இப்படி செய்திருக்கலாம் என நினைத்திருக்கிறார்.
ஆனால், அந்த மின்னஞ்சலில் அதிஷ்ட இலாப நிறுவனத்தின் பெயர், முகவரி உட்பட்ட விடயங்கள் சரியாக இருப்பதை உணர்ந்த அவர், அந்நிறுவனத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி விபரத்தை கூறியுள்ளார். அப்போது, அவருக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக கிடைத்திருப்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய அவர்,"அதிஷ்ட இலாபத்தில் எனக்கு ஜாக்பாட் அடித்ததாக மின்னஞ்சல் வந்தது. கல்லூரி கால நண்பர்கள் சிலர் இப்படி விளையாடுகிறார்கள் என நினைத்தேன். ஆனால், உண்மையாகவே நான் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் வெற்றிபெற்றதை நிறுவனம் மூலமாக அறிந்தேன். நான் பல வருடங்களாக அதிஷ்ட இலாப சீட்டு வாங்கி வருகிறேன். சில முறை வெற்றிபெற்றும் இருக்கிறேன். ஆனால், இந்த வெற்றி என்னால் மறக்க முடியாதது" என்றார்.
கிட்டாத வெற்றி
உண்மையில், அந்த நபர் $300,000,000 Diamond Riches scratch-off ticket-ஐ அண்மையில் வாங்கியுள்ளார். அதில் அவருக்கு வெற்றி கிட்டவில்லை. அதேநேரத்தில், அந்த டிக்கெட்டை வாங்கியவர்களுக்கு இரண்டாம் சான்ஸ் உண்டு என நிறுவனம் முன்னரே தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இரண்டாம் முறை வெல்பவர்களுக்கு 500 டொலர் முதல் 1 லட்சம் டொலர் வரை பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படித்தான் அந்த நபருக்கு ஒரு லட்சம் டொலர் பரிசாக கிடைத்திருக்கிறது.