மன்னார் நகர சபையில் முற்றிய வாக்குவாதம்
மன்னார் (Mannar) நகர சபையின் மூன்றாவது அமர்வு நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் நேற்று (27) இடம்பெற்றது.
கடந்த மாத கூட்டறிக்கை ஏற்கனவே உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில்,குறித்த கூட்டறிக்கையை சபையில் வாசிக்காது அதனை ஆதரித்து முன் மொழிந்து வழி மொழியுமாறு தவிசாளர் சபையில் தெரிவித்தார்.
இதனால் சபையில் நீண்ட நேரம் சர்ச்சை ஏற்பட்டதோடு,குறித்த கூட்டறிக்கையை சபையில் வாசித்து சரி பிழை பார்க்காமல் முன்மொழிய முடியாது என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு, குறித்த அறிக்கையில் பல்வேறு பிழைகள் மற்றும் திருத்தங்கள் காணப்படுவதாகவும் எனவே குறித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக உறுப்பினர்கள் திருத்தங்களோடு, சபையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
இதனால் சபை அமர்வை தொடர்ச்சியாக நடத்திச் செல்ல முடியாத நிலை தவிசாளருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாத கூட்டறிக்கை திருத்தங்களுடன் சமர்ப்பிக்கும் வகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மூன்றாவது சபை அமர்வு இன்று (28) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் கடந்த இரு அமர்வுகளும் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ,எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

