தமிழ் தேசிய துக்க தினம் பிரகடனம்
எதிர்வரும் திங்கட்கிழமை (05) தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துகின்றோம் என தமிழ் சிவில் அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவையொட்டி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண.
பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவையொட்டி, அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்குகிழக்கு இணைந்த தமிழர் தேசம் எங்கும் துக்கதினங்களாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை (05) தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனபடுத்தப்படுத்துகின்றோம்.
இதற்கு தமிழ் தேசிய கட்சிகள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்குவதுடன், திங்கட்கிழமை அனைவரும் தங்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும், வணிக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டும், உங்கள் உடைகளில் கறுப்புப் பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அதே நாளில்தமிழகம் மற்றும் புலம்பெயர்தேசம்எங்கும் வாழும் தமிழ்மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில்ஆழ்த்தியுள்ளது.
ஆயரின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிட முடியாத ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் தமிழ் தேசியம் ஒரு சிறந்த தலைவனை இழந்து நிற்கின்றது.
தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர் தேசம் இன்று இழந்து நிற்கின்றது
. 2009 ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கபட்ட பின் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நேரம் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர்.
தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டபொது மக்களின் எண்ணிக்கையை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொது வெளியிலும் சர்வதேசத்திலும் அறுதியிட்டு தெரிவித்தவர்.
பாதிக்கப்பட்ட தமிழினத்தின் நீதிக் குரலாக, சாட்சியாக இருந்த மிகப்பெரும் ஆளுமையை நாம் இன்று இழந்துநிற்கின்றோம் - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.