மன்னாரில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள்!
மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் நேற்று முன்தினம் (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இரு குடும்பஸ்தர்களின் இறுதிக்கிரிகைகள் இன்றைய தினம் (26) இடம் பெற்றுள்ளது.
மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (வயது-42) மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து (வயது-56) ஆகியோரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களாவர்.
இவர்கள் இருவரும் வியாழனன்று (24) காலை மோட்டார் சைக்கிளில் வயலுக்குச் சென்ற போது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றதோடு, குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிணையில் விடுவிக்கப்பட்டவர்

குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் ஒருவரான நொச்சி குளத்தைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா கடந்த வருடம் (2022) மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் (2022) நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற இரு சகோதரர்களின் இரட்டை கொலைக்கு பழி வாங்கும் நோக்குடன் இச்சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த இரட்டை கொலை தொடர்பாக அடம்பன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
