முறையற்ற வீதி அபிவிருத்தியால் வீடுகளுக்குள் வெள்ள நீர்- முறையிடச் சென்ற மக்களை அவமரியாதைப்படுத்திய பொறியியலாளர்!
சாந்திபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததையடுத்து முறைப்பாடு தெரிவிக்க சென்ற மக்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் அவமரியாதையாக நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த சில தினங்களாக மன்னார் நகர்ப் பகுதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்சியாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் அண்மையில் சாந்திபுரம் பகுதியில் மன்னார் நகர சபைக்கு சொந்தமான வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் காபட் வீதிகளாக மாற்றப்பட்டன.
இருப்பினும் வீதிகளில் ஒழுங்கான வடிகால் அமைப்போ, நீர் வழிந்தோடக் கூடிய ஏற்பாடுகளோ மேற்கொள்ளாது வீதி அமைத்துள்ளனர். இதன் காரணமாக மழை நீர் கடலுடன் கலக்க முடியாத நிலையில் மக்களின் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நகர சபை தலைவர் மற்றும் செயளாலருக்கு தெரியப்படுத்திய நிலையில் ஒழுங்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முககவசங்கள் அணிந்தே முறையிட சென்றனர்.
அதன் போது நிறுவனத்தில் பணிபுரியும் பொறியியலாளர் பாதிக்கப்பட மக்களை மரியாதை குறைவாக நடத்தியதுடன் அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறும் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது எந்த வீதி செயற்பாடுகளும் செய்ய முடியாது எனவும் இதற்கு மேல் இங்கு நின்றால் காவல்துறையிடம் பிடித்து கொடுத்து விடுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட மக்கள் மன்னார் நகர பிரதேச செயலாளரிடம் குறித்த விடயம் தொடர்பாக நேரடியாக முறையிட்டதை தொடர்ந்து நீர் வழிந்தோடக்கூடிய தற்காலிக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் பிரச்சினையை உரிய முறையில் தீர்க்காது மக்களை அவமரியாதைக்கு உட்படுத்திய மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் மீது மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.




