மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தலைவர் தெரிவு- பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவர் கடத்தல்?
மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற இருந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் சக பெண் உறுப்பினர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாந்தை மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர் என்.ரம்சியா குற்றம் சுமத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த நிலையில் புதிய தலைவருக்கான தெரிவு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் நேற்று புதன் கிழமை காலை 10.30 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதன் போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சக உறுப்பினரான விளாத்திக் குளத்தைச் சேர்ந்த நெசவுநாதன் தவமலர் என்பவரை மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் தௌபீக் என்பவர் கடத்தியுள்ளார். குறித்த பெண் உறுப்பினரை தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவருடைய தொலைபேசி இலக்கம் செயலிழந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமது கட்சியின் உறுப்பினர் ஒருவரை தலைமறைவு செய்ய வைத்து குறித்த வெற்றியை பெற்றுள்ளனர். இதனால் பெண் சமூகத்திற்கான ஒரு கௌரவத்தை நாங்கள் இழந்துள்ளோம். குறித்த பெண் உறுப்பினரை கடத்தி எங்கே வைத்திருக்கின்றார்கள்? என்று தெரியவில்லை. இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் தெரிவுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சி சார்பாக விக்கினராசா கயிலைநாதன் ஆகிய இருவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
24 உறுப்பினர்களைக் கொண்ட மாந்தை மேற்கு பிரதேச சபையில் தலைவர் தெரிவிற்கான வாக்களிப்பின் போது 2 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. மேலும் ஒரு உறுப்பினர் நடுநிலை வகித்தார். ஏனைய 19 உறுப்பினர்களும் பகிரங்க வாக்களிப்பை மேற்கொண்டனர். இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் 12 வாக்குகளையும், தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சி சார்பாக போட்டியிட்ட விக்கினராசா கயிலைநாதன் 9 வாக்குகளையும் பெற்ற நிலையில் மேலதிக 3 வாக்குகளினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் வெற்றி பெற்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

