வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை முற்றுகையிட்ட பெண்கள் குழு!
மன்னார் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மந்தமான செயற்பாட்டை கண்டித்தும் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுதிட்டத்துக்கான நிதி விடுவிக்கப்படாதையும் எதிர்த்து மன்னார் ஜீவபுரம், சாந்திபுரம், ஜிம்றோன் நகர் பகுதிகளை சேர்ந்த பெண்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில் மன்னார் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் இன்றைய தினம் காலை 10 மணியளவில் முற்றுகை இட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2018 ஆண்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான நிதி மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை விடுவிக்கப்படத நிலையில் பழைய வீடுகளும் இன்றி புதிய வீடும் முடிவுறுத்தப்படாத நிலையில், பல்வேறு அசெளகரியங்கள் மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் வீடு அமைப்பதற்கு என பெறப்பட்ட கடன்களை கூட திரும்ப செலுத்த முடியாத நிலையில் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்து வீட்டுத்திட்ட பயனாளிகளான பெண்கள் போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அந்த விட்டுத்திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இரண்டாம் மூன்றாம் கட்டங்களுக்கான நிதி விடுவிக்கப்படாத நிலையில் இந்த அரசாங்கம் புதிய வீட்டு திட்டங்களை அமைப்பதற்கு நிதி ஒதுக்கிடு செய்வதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே எந்த அரசாங்கமாக இருந்தாலும் நாங்களும் இந்த நாட்டின் குடி மக்கள் என்பதை உணர்ந்து முழுமைப்படுத்தப்படாத வீட்டு திட்டங்களுக்கான நிதியையும் முடிவுறுத்திய வீட்டுத் திட்டங்களுக்கான மிகுதி பணத்தினையும் விரைவில் விடுவித்துத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.




