சிஐடியில் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் இன்று (21) காலை 9 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தென்கொரிய (South Korea) வேலைவாய்ப்பு சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, அவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்துள்ளார்
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளார்.
அதன்படி முன்னாள் அமைச்சர் இன்றையதினம் (21.01.2025) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக நேற்றைய தினம் (20.01.2025) மன்றில் தெரிவித்திருந்தார்.
தென்கொரியாவில் விவசாய மற்றும் மீன்பிடித் தொழில்துறைகளுக்காக பணியாளர்களை அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு பிரதான நீதவான்
இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் முன்பிணைக்கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு நேற்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கத் தயார் என அவரது சட்டத்தரணிகளால் அறிவிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் எழுத்து மூலம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களம்
இதன்படி தற்போது 35 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கைது செய்வதற்கான எந்த காரணங்களும் முன்வைக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமது கட்சிக்காரர் கைது செய்யப்படக் கூடும் என ஏற்பட்ட அச்சம் காரணமாக முன்பிணை கோரிய மனுத் தாக்கல் செய்யப்பட்டதாக மனுஷ நாணயக்கார சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அறியப்படுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |