போலியாக பதிவு செய்யப்பட்டுள்ள சொகுசு வாகனங்கள்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த 05 பேர் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத பெருமளவிலான கார்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அனுமதி வழங்கப்படாத சொகுசு வாகனங்கள்
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில், அனுமதி வழங்கப்படாத சுமார் 400 கார்களை திணைக்களம் பதிவு செய்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 156 வாகனங்கள் குறித்த தகவல்களை ஆணைக்குழு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை சொகுசு வாகனங்கள் வகையைச் சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாகனங்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு போலியாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படுவதால், அரசுக்கு பெருந்தொகை வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை
மேற்குறிப்பிடப்பட்ட வாகனங்களில் 07 வாகனங்களை தற்போதைய உரிமையாளர்களிடம் இருந்து பெற்று இலங்கை சுங்கத்தில் ஒப்படைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி 06 வாகனங்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 05 வாகனங்கள் இலங்கை சுங்க பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |