சிறிலங்கா படையினர் மன்னாரில் அரங்கேற்றிய கொடூரம்!! இன்று 37 ஆம் ஆண்டு நினைவு தினம்.... ( படங்கள்)
மன்னார் வங்காலைப் பகுதியில் 1985 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் அவருடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட அப்பாவி சிறுவர்கள் மற்றும் பொது மக்களின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டது.
வங்காலை புனித ஆனாள் தேவாலயத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அமரர் மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குழுக்கள் இணைந்து திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.
இதன் போது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர், ஆயரின் செயலாளர் உள்ளடங்களாக அருட்தந்தையர்கள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அருட்பணி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கு வருகை தந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
1985 ஆண்டு தை மாதம் 6ஆம் திகதி வங்காலை தூய ஆனாள் ஆலய பங்கு பணி செயலாளராக கடமையாற்றிய அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் அவருடன் தங்கியிருந்த அப்பாவி சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் 10 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




