பற்றியெரியும் சவுதியின் எண்ணெய் ஆலை : தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹவுதி கிளர்ச்சி படை
சவுதி தலைநகர் ரியாத்தின் தெற்கே அமைந்துள்ள சவுதி அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான அராம்கோ நிறுவனத்தின் ஆலையில் நேற்று (சனிக்கிழமை03) இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த ஆலையிலிருந்து தீப்பிழம்புகளும் அடர்த்தியான புகையும் வெளியேறின.
பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைக் கொண்டு அந்த ஆலையைத் தாக்கியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளனர்.
தாக்குதலுக்கு பொறுப்பேற்பு
நேற்று (சனிக்கிழமை) இரவு, ரியாத்தில் உள்ள எண்ணெய் நிலையம் ஒன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் குறிவைக்கப்பட்டதாக ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் யஹ்யா சாரி தெரிவித்தார்.
ஆனால் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக சவுதி அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
கடந்த வாரம், சவுதியின் யான்பு பிராந்தியத்தில் உள்ள அராம்கோ நிறுவனங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் தெரிவித்திருந்தனர்.
தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் சவுதி
இதேவேளை ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா ஒரு புதிய தரைவழித் தாக்குதலைத் திட்டமிட்டு வருவதாக ரொய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செங்கடலின் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான பாப் அல்-மண்டாப் நீரிணையைக் கைப்பற்றி, கடலோரப் பகுதிகளிலிருந்து ஹவுதிகளை விரட்டியடிப்பதே சவுதியின் நோக்கமாகும். சவுதி வான்வழி ஆதரவுடன் ஏமன் அரச படைகள் தரைவழித் தாக்குதலைத் தொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு உளவுத் தகவல்களை வழங்க அமெரிக்கா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், அது நேரடி இராணுவப் போரில் ஈடுபடாது என்று கூறப்படுகிறது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |