மிகவும் இருண்ட நிலையில் இலங்கையின் அடிமட்ட பொருளாதாரம்
இலங்கையின் வரவு செலவு திட்ட உபரி மற்றும் சர்வதேச கடன் மதிப்பீடுகள் சாதகமாக உயர்ந்துள்ளதாகக் காட்டப்படும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் வெறும் தற்காலிக சந்தைப்படுத்துதல் விளம்பரங்கள் மட்டுமே என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உண்மையான அடிமட்டப் பொருளாதார யதார்த்தம் மிகவும் இருண்டதாகவே தொடர்கிறது என்று பொருளாதார வல்லுநர்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, அரசாங்கத்தின் வருவாய் 110% வரை அதிகரித்துள்ளதாகவும், வரவு செலவு திட்டத்தில் சாதனை அளவிலான உபரி காணப்படுவதாகவும் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் தரவுகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
வறுமை தொடர்பான அறிக்கை
நாட்டின் கடன் மதிப்பீட்டு நிலையும் முன்னணியில் இருப்பதாகக் காட்டப்படுகிறது.

ஆனால், இந்த வெளிப்படுத்தலுக்கு பின்னால் உள்ள விவகாரம் மிகவும் அபாயகரமானது என்று தற்போதைய களநிலவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
உலக வங்கியின் சமீபத்திய வறுமை தொடர்பான அறிக்கையின்படி, இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த குடும்பங்களில் சுமார் 75% சதவீதத்தினர் தங்களின் அன்றாட குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவுகளைக் கூட சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
2019-ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று மற்றும் அதனைத் தொடர்ந்த பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட வறுமை நிலையில் இருந்து நாடு இன்னமும் மீளவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் கடைகளில் 250 கிராம், 100 கிராம் என மிகக் குறைந்த அளவிலேயே பொருட்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடன் வாங்கும் அவல நிலை
பலர் கையில் பணமில்லாமல் கடைகளில் கடன் சொல்லிப் பொருட்களை வாங்கும் அவல நிலையும், சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் தவிக்கும் காட்சிகளும் அன்றாட யதார்த்தமாக மாறியுள்ளன.

பொருளாதார நெருக்கடியின் நேரடி விளைவாக, இலங்கையின் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள் தங்களின் தினசரி உணவு வேளைகளைக் குறைத்துக் கொண்டுள்ளன.
இது நாட்டில் மந்தபோஷணை (Malnutrition) மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டு குறியீடுகளை மிக அபாயகரமான அளவிற்கு உயர்த்தியுள்ளது.
அரசாங்கம் காட்டும் வரவுசெலவு திட்ட உபரியால் இந்த மக்களின் பசியையோ அல்லது குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டையோ மறைக்க முடியாது என சமூக ஆர்வலர்கள் சாடுகின்றனர்.
அரசாங்கத்தின் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பான அஸ்வசும திட்டத்தில் தகுதியற்ற பல மத்திம வருவாய் ஈட்டுபவர்கள் உள்நுழைந்துள்ள அதேவேளையில், உண்மையான ஏழை மக்கள் பலர் விடுபட்டுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களிடம் முறையான பிறப்புச் சான்றிதழ்கள் அல்லது டிஜிட்டல் விழிப்புணர்வு இல்லாததால் அவர்களால் இத்திட்டத்திற்கு ஆன்லைனில் பதிவு செய்ய முடியாமல் போயுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறுகளால் விடுபட்ட ஏழைத் தாய்மார்களுக்கு அடுத்த வருடம் வரை காத்திருக்குமாறு அதிகாரிகள் கைவிரிக்கும் சம்பவங்கள், இந்த பாதுகாப்பு வலையமைப்பின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
அதீத வரிகள்
நாட்டின் வரவு செலவு திட்ட உபரி என்பது பொதுமக்களின் மீது சுமத்தப்பட்ட அதீத வரிகள் மூலம் திரட்டப்பட்டதே தவிர, அது மக்களின் வாங்கும் திறனை உயர்த்தவில்லை.
இந்த உபரி வருவாயை நாட்டின் வருமான சமநிலையின்மையைக் குறைப்பதற்கோ அல்லது ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கோ பயன்படுத்துவதற்கான எந்தவொரு முறையான திட்டமும் தற்போதைய அரசிடம் இல்லை என விமர்சிக்கப்படுகிறது.
ஆட்சியாளர்கள் தங்களின் அரசியல் நேர்மையை மட்டுமே மூலதனமாகக் காட்டி பிரச்சாரம் செய்கிறார்களேயொழிய, அடிமட்ட மக்களின் கடுமையான வாழ்வாதாரப் போராட்டங்களுக்கு இன்னும் முறையான தீர்வு காணப்படவில்லை.
புள்ளிவிவரங்கள் காட்டும் தற்காலிகப் பொருளாதார முன்னேற்றம், சாதாரண மக்களின் சமையலறையை வந்தடையாத வரை நாட்டின் உண்மையான பொருளாதாரம் வாலறுந்த நிலையிலேயே இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |