மாவடிமுன்மாரி துயிலுமில்ல நினைவேந்தல் நிகழ்வு
மட்டக்களப்பு - மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய (27) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் மிகவும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்திற்கு வருகை தந்த மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
சுடரேற்றி, மலர்தூவி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருவதுடன், பிரதேசத்தின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் தொடர்ந்து துயிலும் இல்லத்தை நோக்கி வருகை தந்தனர்.




முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில், தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாவீரர் நாள் நவம்பர் 27ஆம் திகதியான இன்று, துயிலுமில்லம் முழுவதும் நினைவேந்தலுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளதுடன், மாவீரர்களின் நினைவிடங்களில் சுடர்கள் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மாவீரர்களின் பெற்றோர்கள், குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் துயிலுமில்லத்தை நோக்கி வருகை தந்து கொண்டிருக்கின்றனர். தமது பிள்ளைகளையும், உறவுகளையும் இழந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களின் நினைவிடங்களில் சுடரேற்றி, மலர்தூவி, கண்ணீருடன் அஞ்சலி செலுத்துவதற்குத் தயாராகி வருகின்றனர்.
ஆண்டுகள் பல கடந்தாலும் தமது பிள்ளைகளின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து வாழும் பெற்றோர்களினதும் உறவினர்களினதும் உணர்வுகள் துயிலுமில்லச் சூழலில் ஆழ்ந்த துயரத்தையும் நினைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன.
மாவீரர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூரும் வகையில் மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.






| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |