மே தினத்தை தையிட்டி விகாரை எதிர்ப்பு தினமாக மாற்ற காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நடைபெறவிருக்கும் எழுச்சி ஆர்ப்பாட்டங்களை தையிட்டி விகாரைக்கு எதிராக மேற்கொண்டு பாரிய எதிர்ப்பாக வெளிக்கொண்டு வருமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று (20.04.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாகவும் மற்றும் சிங்கள மக்களுடைய பௌர்ணமி தினமும் இடம் பெறுகின்ற ஒரு முக்கிய நாளாகும்.
தையிட்டி காணியை விடுவிப்பு
காணிகளை விடுவிக்கும் போது அவை நில அளவீடு செய்து மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டு பின்னரே அது உரிய காணி உரிமையாளர்களுக்கு கையளிக்கப்படுவது வழமையாக இருக்கின்ற போதும் இம்முறை தையிட்டி காணியை விடுவிப்பதாக கூறி காணி அளவிடும் முயற்சி ஒன்று இடம் பெறவிருந்தது.

அவ்வாறு இடம்பெறுகின்ற போது மக்கள் எதிர்த்து காணி அளவீட்டை தடுத்தால் காணி விடுவிப்பதை மக்கள் தடுத்தார்கள் என காரணம் காட்டி அந்த காணியை அபகரிப்பதற்கான ஒரு சூழ்ச்சி அமைந்திருந்தது.
ஆனால், மக்கள் காணி அளவீடு செய்ய சம்மதித்தித்ததால் சூழ்ச்சி பலிக்காத நிலையில் தையிட்டி விகாரையின் விகாராதிபதி ஊடாக பலாலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து காணி அளவீடு செய்வதை தடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டதாகவும் முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |