நாட்டில் மீண்டும் தட்டம்மை நோய் பரவும் அபாயம் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை
நாட்டில் தட்டம்மை நோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் எந்தவொரு நிகழ்வையும் உடனடியாகத் தெரிவிக்குமாறு வைத்திய நிபுணர்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
காய்ச்சல் மற்றும் தோல் தடிப்புகள் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நிகழ்வுகளை தேசிய கண்காணிப்பு அமைப்பின் மூலம் தெரிவிக்க வேண்டும் என நோய்ப்பரவல் பிரிவின் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் அதுல லியனபத்திரண தெரிவித்துள்ளார்.
தட்டம்மை நோய் அறிகுறிகளைக் காட்டும் எந்தவொரு நோயாளியையும் மேலதிக சிகிச்சை மற்றும் கண்காணிப்பிற்காக ஒரு அரசாங்க வைத்தியசாலைக்கு அனுப்புமாறு தனியார் வைத்தியசாலைகளின் சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களுக்கு அமைச்சு குறிப்பாக அறிவுறுத்தியுள்ளது.
தடுப்பூசிகளையும் முழுமையாகப் போட்டிருக்க வேண்டும்
நோய் பரவுவதைத் தடுப்பதற்குத் தடுப்பூசியே மிகவும் பயனுள்ள வழியாக உள்ளது என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்படி, 9 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 3 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாகப் போட்டிருக்க வேண்டும்.
மேலும், பெற்றோர்கள் தங்களுக்கோ அல்லது தங்கள் குழந்தைகளுக்கோ காய்ச்சலுடன் தோல் தடிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறு பொது மக்களை அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு தட்டம்மை நோயாளிகள் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்