ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரான் புதிய சட்டம்! சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் பதற்றம்
ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய சட்டமூலம் ஒன்றை வரைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கடல்சார் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், சில குறிப்பிட்ட கப்பல்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கும் இந்த புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணைக்குழுவின் மறுஆய்வில் தற்போது உள்ள இந்தச் சட்டமூலம், வர்த்தகக் கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஓமானுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளிலிருந்து சுயாதீனமாக முன்வைக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.
ஈரானுக்குச் சேதம்
இச்சட்டமூலத்தின் ஆரம்ப பதிப்பில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானால் பகை நாடுகளாகக் கருதப்படும் ஏனைய நாடுகளின் கப்பல்கள் இந்த கடல் பாதையைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
தற்போதைய புதிய பதிப்பில் இக்கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இஸ்ரேலியக் கப்பல்களுடன் தொடர்புடைய அல்லது ஈரானுக்குச் சேதம் விளைவித்ததாகக் கருதப்படும் நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்புடைய இராணுவ அல்லது சிவில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், உரிய இழப்பீட்டைச் செலுத்தும் வரை இந்த நீரிணையைக் கடக்கத் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இக்கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களில் உள்ள சரக்குகளின் மதிப்பில் 20% வரை அபராதம் விதிக்கப்படும்.
பாதுகாப்பான கடற்பயணம்
நீரிணையைக் கடக்க அனுமதிக்கப்படும் கப்பல்களுக்குப் பாதுகாப்பான கடற்பயணத்தை உறுதி செய்வதற்கான செலவுகளை ஈடுசெய்யும் வகையில், ஈரான் அரசு வழிசெலுத்தல் சேவைக்கட்டணத்தை (Navigation service fees) வசூலிக்கும்.
இக்கட்டணம் ஈரானிய நாணயத்தில் (Rial) செலுத்தப்பட வேண்டும்.

இச்சட்டமூலத்தை வரைவதற்கான முயற்சி குறித்து முதன்முதலில் கடந்த மார்ச் மாதம் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
இதையடுத்து ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வரைவில், ஈரானுக்குப் பகை நாடுகளின் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்தன.
எனினும், தற்போதைய புதிய வரைவில் இக்கட்டுப்பாடுகள் கப்பல்களுக்கு மட்டுமன்றி, அவை ஏற்றிச் செல்லும் சரக்குகளுக்கும் (Cargo) விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |