தட்டம்மை தடுப்பூசி மேலதிக டோஸ்: சனிக்கிழமை வழங்கத் தீர்மானம்
நாட்டிலுள்ள 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை (சின்னமுத்து) தடுப்பூசி மேலதிக டோஸினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக தெரிவு செய்யப்பட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி எதிர்வரும் 6ஆம் திகதி இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் பிரதம விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.
ஐரோப்பிய மற்றும் தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தற்போது தட்டம்மை நோய் உலகளாவிய ரீதியாக பரவி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சிறுவர் தடுப்பூசித் திட்டம்
கொவிட் காலத்தில் சிறுவர் தடுப்பூசித் திட்டம் முழுவதும் உலகலாவிய ரீதியில் பெரும் சரிவை சந்தித்தது, இதன் விளைவாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள 25 மில்லியன் இரண்டு வயது குழந்தைகள் எந்தவொரு சிறுவர் தடுப்பூசி டோஸையும் பெறவில்லை எனவும்,15 மில்லியன் பேர் பகுதியளவில் தடுப்பூசியை பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் இவர்கள் எதிர்காலத்தில் சின்னமுத்து போன்ற தொற்றுநோய்களுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுகிறது. சின்னமுத்து என்பது அதிக பரவும் விகிதத்தைக் கொண்ட தொற்று நோயாகும். ஒரு சின்னமுத்து நோயாளியினால் 16 பேருக்கு அந்நோய் பரவும் திறன் கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா போன்ற நமது அண்டை நாடுகளில் சின்னமுத்து ஒரு பெரிய தொற்றுநோயாக பரவி வருவதாகவும், எமது நாட்டில், கொவிட் காலத்திலும், உகந்த அளவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டத்தை வழங்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி, முதல் சின்னமுத்து நோயாளிகள் இலங்கையில் பதிவாகியுள்ளதாகவும், ஆரம்ப கட்டங்களில் பதிவாகியுள்ள பெரும்பாலான சின்னமுத்து நோயாளிகள் சிறுவயது தடுப்பூசிகளை முறையாகப் பெறாதவர்கள் என்றும் மருத்துவர் வலியுறுத்தினார்.
கொழும்பில் அதிக நோயாளர்கள்
இதுவரை பதிவாகியுள்ள 740 சின்னமுத்து நோயாளர்களில் 49% கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், இரண்டாவது அதிகூடிய நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
முதற்கட்டமாக, சின்னமுத்து நோய் பரவியுள்ள மற்றும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத இடங்களை கண்டறிந்த 9 மாவட்டங்கள் இந்த தடுப்பூசி வழங்க தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இது 6 முதல் 9 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மேலதிக டோஸாக வழங்கப்படும் என்றும், அந்த குழந்தைகள் உரிய வயதை எட்டியதும் உரிய அளவு டோஸை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களை முதன்மையாகக் கொண்டு ஜனவரி 06 ஆம் திகதி ஒரு நாள் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும், அன்றைய தினம் இந்த மாவட்டங்களின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |