மருத்துவக் குழுக்களிடையே மோதலைத் தூண்ட முயற்சி: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்
மருத்துவர்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி, மருத்துவ சேவையையும் இலவச சுகாதாரக் கட்டமைப்பையும் நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சி இடம்பெற்று வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய மருத்துவப் பிரிவுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 'நாட்டில் ஏற்பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளால் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்வது சவாலாக இருந்த நிலையில், அதற்குத் தீர்வு காண சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்புகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்
மேலும் அனைத்து மருத்துவர்களையும் நாட்டில் தக்கவைத்துக் கொள்வதற்காக “இலங்கை மருத்துவ சேவை” என்ற புதிய சேவைப் பிரிவையும் சம்பளக் கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு அப்போது இணக்கம் எட்டப்பட்டது.

இதற்கமைய, 2026ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின்போது விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களுக்குமான தனியான சேவைப் பிரிவு உருவாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
எனினும், விசேட வைத்தியர்களுக்கு மாத்திரம் தனியான சேவைப் பிரிவை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மருத்துவர்களிடையே பிளவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
ஒரு பிரிவுக்கு மாத்திரம் தனியான சேவைப் பிரிவை உருவாக்குவது இலவச சுகாதார சேவைக்கும் நோயாளர்களுக்கான மருத்துவ சேவைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அந்த யோசனைக்கு தமது சங்கம் இணங்கவில்லை.
இந்நிலையில், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சங்கத்தின் மாகாண மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் அவசரக் கூட்டம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
மேலும், விசேட வைத்தியர்களின் உபகுழுவின் அவசரக் கூட்டம் நாளை (31) நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மருத்துவர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்து, அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றக்கூடிய “இலங்கை மருத்துவ சேவையை” உருவாக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்' என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |