நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் வைத்திய காப்புறுதி பெற்றுக்கொடுக்கப்படும் : ரணில் விக்ரமசிங்க
வெளிநாட்டு நோயாளர்களை இந்நாட்டுக்கு ஈர்க்கும் வகையில் மருத்துவ சுற்றுலாத்துறை (Medical Tourism) மற்றும் சுகாதார சேவைகள் என்பவற்றை உயர் தரத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு உகந்த, முழுமையான சுகாதார கொள்கை அவசியமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதற்காக அதிகளவில் வைத்தியர்களை உருவாக்குவதற்கு வைத்திய பீடங்களையும் பல்கலைக்கழகங்களையும் ஆரம்பிக்க வேண்டியது அவசியம் என்றும் அரசாங்கத்தினால் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வைத்திய காப்புறுதி பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.
ஜோசப் பிரேசர் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற நூற்றாண்டு விழாவிலேயே அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
மருத்துவ சுற்றுலாத்துறை
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அதிபர்
“இந்நாட்டுக்கு வெளிநாட்டு நோயாளர்களை மருத்துவ தேவைக்காக வரவழைப்பதற்கு மருத்துவ சுற்றுலாத்துறை மற்றும் சுகாதார சேவைகள் என்பன உயர் தரத்தில் காணப்பட வேண்டும். அவ்வாறான சேவைக்கு இந்த வைத்தியசாலையே உதாரணமாகும்.
எமது சுகாதார கொள்கை தொடர்பில் நாம் மீளச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்நாட்டில் வைத்தியசாலை கட்டமைப்பு அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் என பிளவுபட்டு காணப்படுகின்றன.
பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கிறார்கள். அதனால் நாட்டிற்குள் அதிகளவில் வைத்தியர்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கமைய முதலாவது அரச சார்பற்ற வைத்திய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். தெற்காசியாவின் தொழில்நுட்ப நிறுவனமான (SAITM) இனை மொறட்டுவ வைத்தியசாலைக்கு கையளித்துள்ளோம்.
ஐக்கிய இராச்சியத்தின் வைத்தியசாலை கட்டமைப்பு
அதேபோல் இன்னும் பல மருத்துவ பல்கலைக்கழகங்களை நாட்டில் ஆரம்பிக்க முடியும் என நம்புகிறோம். வைத்தியர்களை அதிகளவில் உருவாக்குவதற்கு அதனை தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை.
இலங்கை வைத்தியர்கள் இல்லாமல் ஐக்கிய இராச்சியம் தனது வைத்தியசாலைகளை நடத்திச் செல்வதில் நெருக்கடியை எதிர்கொள்கிறது. அதனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுடன் சேர்ந்து, நாங்கள் ஐக்கிய இராச்சியத்தின் வைத்தியசாலை கட்டமைப்பை நாமும் நடத்திச் செல்கிறோம் என்று கூறினால் தவறாகாது.
உதவி பெறும் நாடாக மட்டுமன்றி, உதவி வழங்கும் நாடாகவும் இலங்கை மாற வேண்டும். அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயற்படுவதற்கான செயற்றிட்டங்களை நாம் தயாரித்துள்ளோம். அரசாங்கத்தினால் நாட்டு பிரஜைகளுக்கு மருத்துவக் காப்புறுதி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது. அப்போது சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலைக்குச் செல்வதா அரச வைத்தியசாலையை நாடுவதா என்பதை மக்கள் தீர்மானிப்பர்.
இந்த நாட்களில் நானும் ஒரு வைத்தியரை போலவே செயற்படுகிறேன். மரணத்தின் இறுதி தருவாயிலிருக்கும் நோயாளியை சுமந்து செல்லும் அதேநேரம் அவருக்கு சிகிச்சையளித்து காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.
திறந்த பொருளாதார கட்டமைப்பின் கீழ் நாடு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால் தனியார் நிறுவனங்களும் அபிவிருத்தி அடையலாம். அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டுக்கு முன்னேற்றம் கிட்டாது.“ எனத் தெரிவித்தார்.