இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் தமிழ் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு!
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளும் சந்தித்து கலந்துரையாடியிருந்தன.
நேற்றைய தினம் (28) கொழும்பு இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு இடம் பெற்றிருந்தது.
குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், கடந்த வெள்ளிக்கிழமை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதாக தெரிவித்தார்.
அத்துடன், உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்ட 4 முக்கிய விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் ஜெய்சங்கரிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயர்ஸ்தானிகரிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியினால் கையளிக்கப்பட்ட பிரதமர் மோடிக்கான, மலையக அபிலாசைகள் ஆவணம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு, கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விளக்கம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டிணைக்கப்படும் செயற்பாடுகளில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களை இன்னமும் முழுமையாக இணைத்துக்கொள்வது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



