வரவு செலவுத் திட்டம்! கட்சி தாவ தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கட்சியின் செயலாளருக்கு கடிதம் ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவின் தமிழ் அதிகாரி ஒருவரிடம் ஐ.பி.சி ஊடகம் தொலைபேசியில் வினவியபோது,
இது தொடர்பாக தேர்தல காலத்தின்போது முரண்பாடுகள் இருந்ததாகவும் இது தொடர்பில் கட்சியின் உயர்மட்ட குழுவிற்கு அவர்கள் அறிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக கட்சி ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்கள் பதவி விலகவில்லை எனவும் அவ்வாறன ஒரு நிலை ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Vithanage), பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Saminda Wijesiri) ஆகிய இருவருமே இவ்வாறு பதவிவிலகியுள்ளனர் எனவும் வரவு - செலவுத் திட்ட கூட்டத்தொடரின் போது அரசாங்கத்துடன் இணையக்கூடிய சாத்தியம் உள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.