கோட்டாபயவின் அழைப்பினை ஏற்காத ஆளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! அமைதி காத்தார் பசில்
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கூட்டமானது கடந்த 24 ஆம் திகதி அரச தலைவர் மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
கூட்டத்திற்கு சமூகமளிக்காத 52 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதை முன்னரே அறிவித்துள்ளனர்.
கூட்டத்தில் கலந்துகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) மற்றும் அமைச்சர் விமல் வீரவங்ச (Wimal Weerawansa) ஆகியோரும் உள்ளடங்குவர்.
குறித்த கூட்டத்தில் அரச தலைவரும் பிரதமரும் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை வெளியிட்ட போதிலும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.