11 மாவட்டங்களுக்கு வெப்ப அபாய எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெப்ப அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை' மட்டம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(22) வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்
மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் “எச்சரிக்கை” மட்டம் வரை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால், பொதுமக்கள் அவதானமாக இருக்கவும், வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

சிரேஷ்ட வானிலை அதிகாரியின் அறிவுறுத்தல்
மேற்குறித்த பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீனும் தெரிவித்துள்ளார்.
வெப்ப அதிகரிப்பு தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “இவை மனித உடலில் வெப்ப அதிகரிப்பை ஏற்படுத்துகின்றது.
இது "வெப்பச் சுட்டெண்" என அழைக்கப்படும். இதனை அதிகரித்த வெப்பநிலையாக கொள்ள முடியாது.
இந்த வெப்பச் சுட்டெண்ணானது சாரீரப்பதனுக்கும் அதிகரித்த வெப்பநிலைக்கும் இடையிலான தொடர்பின் கணிப்பீடாகும். இதன்போது நீர் இழப்பு ஏற்படுகின்றது. அதிகரித்த நீர் இழப்பின்போது மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவற்றை தவிர்த்துக்கொள்ளும் முகமாக
- அதிகளவில் நீர் ஆகாரங்கள், நீர்ப்பாணங்கள் பருகவேண்டும்.
- வெளி இடங்களில் வேலை செய்பவர்கள் களைப்படையாமல் இருக்க அடிக்கடி நிழல் சார்ந்த இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும்.
- வீட்டில் உள்ள நோயாளிகளை அடிக்கடி பார்த்துக்கோள்ள வேண்டும். சிறுவர்கள் வெளியில் சென்று விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- வெளி இடங்களில் காணப்படும் செயற்பாடுகளை இயன்றளவு குறைத்துக்கொள்ள வேண்டும்.
- மெல்லிய வெண்மை நிறமுடைய ஆடைகளை அணிய வேண்டும்” - என்றார்.

