நாடு முழுவதும் கடும் வெப்ப எச்சரிக்கை : நாளை வரை அவதானமாக இருக்க அறிவுறுத்தல்
நாட்டில் வெப்பமான வானிலை நிலவுவது குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் இயற்கை பேரழிவு முன்னறிவிப்பு மையம் இன்று (19) விடுத்துள்ள அறிவித்தல் நாளை (20) வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், மொனராகல மாவட்டத்திலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை "எச்சரிக்கை" மட்டத்தில் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
அதன்படி, மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் உள்ள பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்தவும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இந்த நிலைமையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், சிறு குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்கள் கடினமான செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்வதோடு, மெல்லிய, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொதுமக்கள் இவற்றை கவனத்தில் கொண்டு, மனித ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |