இலங்கையில் நுண்நிதி கடன்களால் 28 இலட்சம் பேர் பாதிப்பு
இலங்கையில் நுண்நிதி கடன் பிரச்சினையால் கிராம மக்களில் 2 800 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் குறித்த குழு அண்மையில் கூடிய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் 38 சதவீதம் முதல் 48 சதவீதம் வரையிலான அதிக வட்டி வீதத்துக்கே நுண்நிதி கடன்கள் வழங்கப்பட்டுள்ளமையும் இதன்போது புலப்பட்டுள்ளது.
நுண்நிதி கடன் பிரச்சினை
இதேவேளை பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்வதற்கு நுண்நிதி கடன் பிரச்சினையும் ஒரு காரணமாகும்.
நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையிலுள்ள நிறுவனங்கள் இந்தக் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் இலங்கை மத்திய வங்கி, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, சமுர்த்தி திணைக்களம், பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, நிறுவனப் பதிவாளர் திணைக்களம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
24 இலட்சம் பெண்கள்
நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அமைப்புக்கள் இங்கு உரையாற்றும் போது
நுண்நிதி நெருக்கடியினால் 2 800 000 கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 24 இலட்சம் பெண்கள் உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் இந்தக் கடன்கள் குறைந்த தொகையாக இருந்தாலும், கிராமப்புற மக்களால் அதனை செலுத்த முடியாத நிலையில், 38 சதவீதம் முதல், 48 சதவீதம் வரையிலான அதிக வட்டி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கிராமப்புற பெண்களின் வாழ்க்கை முற்றாக மாறியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமான கிராமப்புறப் பெண்கள் வீட்டு பணிப்பெண்களாக செல்வதற்கு நுண்நிதி கடன் நெருக்கடி, காரணமாக அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களைக் கையகப்படுத்தல்
மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் உள்ள வங்கி அல்லாத ஆறு பிரதான நிதி நிறுவனங்களில் கடன்பெற்ற பெருந்தொகையான குழுவினராலேயே நுண்நிதித் துறையில் இந்த நெருக்கடி உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
மொத்த நுண்நிதி கடனான 84 ஆயிரம் மில்லியன் ரூபாவில் 80 சதவீதமான 67 ஆயிரம் மில்லியன் ரூபாவை இந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதேவேளை கடன் பெற்றவர்களின் சொத்துக்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை இந்த நிறுவனங்கள் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாகவும் இங்கு தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |