ஊழியர் செலவுகளைக் குறைக்கும் திட்டம்: அதிக இலாபம் ஈட்டிய மைக்ரோசொப்ட்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வரும் மைக்ரோசொப்ட் நிறுவனம், ஊழியர் செலவுகளைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்று மாத காலப்பகுதியில் 36.6 பில்லியன் டொலருக்கும் அதிகமான இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் நிறுவனத்தின் வருமானம் 92.3 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வளர்ச்சியாகும் எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
கிளவுட் சேவைகள் வணிகத்தில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியே இந்த வருமான அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மைக்ரோசொப்ட் கிளவுட் சேவையின் வருமானம் 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிதி முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நியூயோர்க் பங்குச் சந்தையின் பிந்தைய வர்த்தகத்தில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 2.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், கனடா, இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தகுதிபெறும் ஊழியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிலிருந்து விலகுவதற்கான நிதிச் சலுகைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
இதன்படி, சுமார் 60,000 ஊழியர்களுக்கு இச்சலுகைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், பணியிலிருந்து விலகுவோருக்கு நிதி உதவி மற்றும் தொழில் திட்டமிடலுக்கான வளங்களும் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் 220,000க்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளதுடன், பல்வேறு தொழில்துறைகளுக்கும் நடைமுறைப் பயன்கள் கிடைத்துள்ளதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
எனினும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்காக மேற்கொள்ளப்படும் பாரிய முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள், நிறுவனத்தின் நிதிச் செயற்பாடுகளில் அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் மைக்ரோசொப்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |