கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளில் அநுர அரசின் கதைகள் QR நடைமுறையில்..
கெட்டிக்காரன் புளுகு எட்டுநாட்களில் தெரியும் என்பது போல கடந்த பத்து நாட்களாகவே நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பு உள்ளதாக செய்தி சொன்ன அநுர அரசாங்கம் இன்று காலை 2022 இன் அரகலய கிளர்ச்சிக்கால QR எரிபொருள் பங்கீட்டு முறைக்கு திரும்பிவிட்டது.
மத்திய கிழக்கு போர் நெருக்கடியின் பின்னணியில் தெற்காசியாவில் உள்ள பல நாடுகள் எரிபொருள் சிக்கனத்தை மையப்படுத்திய சில நடவடிக்கைகளை ஒருவாரத்துக்கு முன்னரே எடுத்தாலும் அநுர அரசாங்கமோ நேற்றுவரை Quick response ஆகிய QR குறியீட்டு முறையிலான விரைவு பதிலளிப்பு விநியோகமுறை அவசியமில்லை என சொல்லியது ஆனால் இன்று காலை அந்த முறையை அது அதிரடியாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு மேற்பார்த்த மேற்கு ஆசிய நெருக்கடி தெற்காசியாவின் இலங்கையிலும்; அநுர தரப்புக்கு ஒரு நெருக்கடி அதிகரிப்பதால் இந்த நெருக்கடியில் ஆதாயம் பார்க்க தென்னிலங்கை கட்சிகள் மீண்டும் ஒரு முறை தமது கூட்டு எதிரணி அடையாளத்தை முறுக்கேற்றத்தலைப்படும் பின்னணியில் QR க்கு ஏகேடியார் ஓகே சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் இலங்கையில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட மாகாண சபைத் தேர்தலை இந்த வருட இறுதிக்குள் நடத்த தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்தாலும் அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா ஆக முடியும்.
ஒருவேளை மாகாணசபை தேர்தல் இழுத்தடிப்பால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையும்; இழுத்தடிக்கப்படுமோ என்ற குறுகுறுப்பு மற்றும் ஜெனிவாவில் அமர்வு சிடுசிடுப்புக்களை தவிர்க்க அத்தைக்கு மீசை முளைக்குமோ தெரியாது.
மத்தியகிழக்கு போர் நேற்றுடன் 3வது வாரத்துக்குள் பிரவேசித்துவிட்ட நிலையில் சமகால நிலைமை இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவையும் தினசரி எகிறவைக்கிறது.
கடந்த மாத இறுதியில் இந்த போர் வெடிப்பதற்கு முன்னர் உலக சந்தையில் 70 அமெரிக்க டொலராக இருந்த ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை இப்போது 100 டொலர்களை தாண்டிவிட்ட நிலையில் இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவு உயரும் என்றாலும் மக்களின் விசனமும் சீற்றமும் மெல்ல மெல்ல அரசாங்கத்துக்கு எதிராக திரும்புவதால் டித்வா சூறாவளிக்குப் பின்னர் அரசதலைவர் அநுரவுக்கு இப்போது புதிய சவால்கள் வந்துள்ள நிலையில் உள்ளூர் மற்றும் உலக நெருக்கடிகளை தழுவி வருகிறது செய்திவீச்சு..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |