மாவீரர்நாள் நினைவேந்தல் கைதுகள் - பொது பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) அறிவித்துள்ளார்.
இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் (Minister of Defense) மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயங்களை இன்று (3.12.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேகநபர்கள் முகப்புத்தகத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த சில நாட்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, முகநூல் ஊடாக பொய்யான விளம்பரங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு தடை செய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பைத் தூண்டுதல் போன்ற குற்றங்களின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 120 மற்றும் 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 27 வது பிரிவின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடுமையான விமர்சனம்
குறித்த விடயம் பொதுமக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகளாலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதுடன் அநுர அரசிற்கு கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பான அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |